1.10.11

இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...




பாகம் 1





















அகதி என்று
பெயர் தாங்கி
பெயர்ந்தோம்....
இன்றும் !!
அகதியென்றே பொறிக்கப்பட்டு
அலைகிறோம் நாடெல்லாம்.......

எங்கள் நிலம்
எங்கள் உரிமை
எமக்கு வேண்டும்.........
பேசினோம் பேசினோம்
முறை பலதாய்
பேசினோம் ...
செவிகளில் ஏற்றிடாத
செவிடர்கள் ஆனார்கள் ..

செவிப்பறை உடைய
சங்கெடுத்து ஊதினோம்..
எதிர்திசையாய் சங்கோடு
எமையழிக்க வந்தார்கள்..
பலமோடு பலமாக
பிரபஞ்சமே அதிர
பறைசாற்றினோம் பாரெல்லாம்..

உரிமை கேட்டு
வலிமை பெற்று
உயரப் பறந்தோம்..
வியந்து பார்க்க மட்டுமே -உலகின்
விழிகள் இருந்தது-தமிழர்
நீதியின் பக்கம்
தலைசாய்க்க தலைகள்
நேர்மையற்று கிடந்தது..

தொப்புள் கொடி
உறவென்று நம்பினோம்...
தொப்பை அறுத்து
சதிசெய்தது மட்டுமே
அவர்களின் கதை..

ஆலமர ஆணிவேராய்
ஆழவேரோடிய நம்பிக்கை-ஒவ்வோர்
தமிழர் மூச்சுள்ளும்
தலை நிமிர்ந்து நின்றது..

வெல்வோம் உரிமையை
கட்டுவோம் அரசொன்று..
பறப்போம் சுதந்திரமாய் -என
வருடங்கள் முப்பதும் தாண்டி
வளர்த்துக் கொண்டோம்..

துளி ஒன்றேனும்
துளிர் விடவில்லை-எம்
நம்பிக்கை மீதான
ஐயங்கள் என்று!!!

உண்மைகள் புரிந்து
கைகொடுக்கும் உலகென்று
கடைசி வரையும்
கனவு கண்டோம்..
இறுதி வரையும்
உறுதி கொண்டோம்..


















அதனாலே.....
நிகழ்பவை எல்லாமே
நிரந்தர விடுதலைக்கே -என
சகிக்கமுடியாத கொடுமைகளையும்
சமாளித்து வாழ்ந்தோம்
நாளை எமகென்றே...

இழந்தோம் அத்தனையும்
நம்பிக்கை வைத்தே-பின்னே
நம்பிக்கையே இறந்துபோனது!!!


தொடரும்.....

செம்பகம்..

24.9.11

மறுபடியும் தோழமையுடன்....






எப்போது இணைவேனோ -என்ற
ஏக்கம் என்னில்
அப்போது எழுந்தது..
அத்தனைக்கும் விடையாய்
மாதம் ஒன்றை நெருங்கையில்
இப்போதே காண்கின்றேன்...

மனதில் ஓர் மகிழ்வும்...
நெஞ்சில் ஓர் நிமிர்வும்...
உதட்டில் ஓர் புன்னகையும் ...
ஏட்டில் ஓர் மாறுதலுமாய்..
மீண்டும் உங்களுடன்
இணைந்து கொள்ளும்
பெருமிதம் இப்போ -இந்த
வலைப் பூவுக்குள்ளே !!!

நலமா!!
என் நேச உறவுகளே..
என் பதிவுலக நெஞ்சங்களே!
உங்களோடு இணைவதில்
உறவுகளே!
உள்ளத்தில் அதிக இன்பம்
ஊற்றாய் பெருகுமே...
எதிரெதிரே கைகுலுக்கி
புன்னகை பூக்கும் நினைவு
உங்களை சந்திக்கையிலே..

பேசப்பட்ட தாய் மொழியும்
மூச்சு அடங்கியபடி
உறங்கு நிலையில்...

பல மைல்கள்
பறந்து வந்தாலும்
பாழ்பட்ட தனிமையோ
விடுபட்டதாய் இல்லை..-ஆனாலும்
உங்களோடு இணைவதில்
தனிமையும் இனிக்குமே...
எண்ணத்தில் சுரக்குமே..
கவிதையை நனைக்குமே..
மீண்டும் உங்களோடு
கைகுலுக்கிய மன
பெருங் கழிப்போடு..............


செம்பகம்..



28.8.11

பிரிகிறேன் இப்போது..







உயரம் ஏற்ற
ஊக்கம் தந்து
தோள் தட்டிய
தோழமைகளே..-எனது
பதிவுலக உறவுகளே!!!

பிரிகிறேன் பிரிகிறேன்
பதிவுலகை விட்டு
பிரிகிறேன்...
நிரந்தரமற்ற எனது
பதிவுலக வாழ்வில்
வருவதும் போவதுமே-எனது
வாழ்வாச்சு..

சில நாட்களில் வரலாம்....
சிலவேளை..
சில மாதங்களின் பின்னே
சந்திக்கலாம்...
மறந்திடேன் உங்களை..
மறுபடியும் வரும் வரை
மறந்திடாதீர் என்னையும்.!!!!.

காலத்தின் மாற்றங்கள்
சாதகமாயும் ,,,,,சாதகமற்றும்
நிலவுகையில்
உதிப்பதும்.....
சட்டென மறைவதும்
எனது கதையானது...

இன்ரனெற் வசதி
இல்லாதபோதும்..
கணனிக்கு ஓய்வு
கிடைக்காத போதும்
உங்கள் பக்கம் எனது
வருகையும் பின்னூட்டமும்
இல்லாமலே போனது...
காரணம் இதுவே!!!

ஈழத்தில் கண்ட
அவலத்தின் காட்சிகளை
வெளிச்சொல்ல முடியாது போகையில்
எழுத்துக்களில் ஆற்ற நினைத்தேன்..
தனிமை வாட்டியபோது...
மனம் வலிக்கும்போது...
பொழுது போக்காக
ஒரு புறம் இருந்தது
இந்த வலைப்பூ..
வேறு எந்தவித
குறிக்கோளும் எனக்கில்லை..

அண்ணனின் நண்பனால்
கிடைத்தது இந்த
வலைத்தள அறிமுகம்..
அவருக்கு எனது
முதல் நன்றி..

கட்டம் கட்டமாய்
சின்னச் சின்னதாய்
நண்பர்களே ..
உங்களின் வருகையால்-நீவீர்
சொல்லும் கருத்துரையால்
மெல்லென
வளர்கிறேன் பதிவுலகில்..
உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்...

உறவுகளே!!!!
மீண்டும் என்
கால் பதிக்கும் வரை
மறந்திடாதீர் என்னை..
பிரிகிறேன் இப்போது..

செம்பகம்..



27.8.11

வாழ்க நீ பல்லாண்டு..


உடன் பிறவா சகோதரியே
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!!


27.08.2011








இனிய !!!
காலம் உன் 
கரம் பற்றி
அதிஸ்டங்களை உன்மீது
அள்ளிச் சொரிந்து
வாழ்க்கை முழுதும் 
வனப்பு வீசிட................

சோகங்கள் ஒளிந்து
சோலை வனமாக-உன் 
மனமெல்லாம் சந்தோசிக்க............

ஏற்றங்களில் அடிவைத்து -நல்
மாற்றங்கள் நீ காண.....

ஏக்கங்கள் எல்லாமே
எளிதாய் கைசேர..........

தாக்கங்கள் முழுதாய்
தகர்த்தே நீ ஒதுக்கிட.........


நாளும் நலமுடன்
நீடூழி நீ வாழ்ந்திட
மலர்கின்றபொழுதெல்லாம்
மகிழ்வோடு நீயிருக்க............

புலர்கின்ற புதிய அகவையில்
வாழ்க வாழ்கவென!!!!
ஒருகொடியில் பூத்த
இருமலரான உன் சோதரியையும்
வாழ்த்துகின்றேன் இந் நாளிலே...





அன்புடன் ..
செம்பகம்

24.8.11

இலக்கின் வழியே நானுமாய்.....





புதியதோர் வாழ்க்கையில்
புகுந்து சுழல
காலச் சக்கரம்
கை நீட்டி அழைக்கிறது..

நீண்ட நாட்களின் 
நிலையான காத்தல்
நிஜமானதாய் இப்போது...

கட்டுக் கட்டாய் 
கட்டி வைத்த
கற்பனைக் கட்டுக்களை
கட்டவிழ்க்கும் வாய்ப்பு
மிக அருகிலே.....

கால் தடக்கி வீழ்ந்தாலும்
கடந்து விடுவேன் -என்ற
திண்ணம் இப்போ
ஆழமாய் மனதில்..

விடிகின்ற பொழுதுகளை
வல்லமையோடு வரவேற்று
கழிகின்ற இரவுகளை
கைகொடுத்து அனுப்பி
காத்திருக்கிறேன் அந்த நொடிக்காய்..

நிமிடங்கள் வருடமாகிய
பொழுதுகள் மாறி
வருடங்களும் நிமிடமாக
பயணிக்கும் ஓர் நினைவு..

விலகாத தனிமையை மட்டும்
விரல் நுனியில் பற்றியவாறு
வாழ்க்கையின் படகு சற்று

நகர தொடங்குகிறது..

கைகோர்த்து விட்ட
அந்த சக்திக்கு
நன்றி சொல்லி -என்
இலக்கின் வழியே நானுமாய்.....

செம்பகம்

22.8.11

ஆதிக்க அறிமுகங்கள்..








நிரந்தரமாய் தொலைத்தோம் -எங்கள்
நிம்மதியான வாழ்வை..
நீதி தேடி அலைகிறோம்
நேர்மையோடு எவருமில்லை..

அன்று தொட்டு
இன்று வரை
காண்பதெல்லாம் ...
கேட்பதெல்லாம்..
நிகழ்வதெல்லாம்..
உயிர் பறிப்புக்களும் ..
குருதி பாய்ச்சலுமே...

சபிக்கப்பட்டு படைக்கப்பட்டதா??-அல்ல
சாக்கடை நாட்டில் வாழ்வதாலோ??
இலங்கை ஜனநாயகத்தை
புகழ்ந்து உரைக்க
வரி ஒன்றேனும்
இல்லை தமிழில்..
தூக்கி கொடுத்து விட்டு
தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறது
பிரித்தானியா????

மரண வாழ்வை
முழுதாய் பரிசளித்து
மார்தட்டி சிரிக்கிறது!!!!


புதிய புதிய அறிமுகங்களாய்
இன அழிப்பிற்கும்...
உயிர் உறிஞ்சலுக்கும்....
கட்டவிழ்த்தி விடுவது
ஆதிக்க வரலாறு..-இப்போ
கிறீஸ் மனிதனாய்
உருவெடுத்திருக்கிறது..
ஆயிரம் கேள்விகளோடு
விடை தெரியாத
மர்மங்களாக இன்றுவரைக்கும்..

குண்டுமழைக்குள்ளும்..
இரத்த ஆற்றிலும்
மூழ்கி குளித்த
தமிழ் நங்கையர்
அச்ச உணர்வோடு
அல்லல் படுவதை எண்ண
மனம் வலிக்கிறது..

எங்கள் ஏக்கமும்..
எங்கள் கண்ணீரும்..
எங்கள் அச்சங்களும்..
எங்கள் பெயர்வுகளும்..
எங்கள் உயிர் பறிப்புக்களும்..
சுதந்திரமற்ற வாழ்க்கையும்..
முடிவு பெறாத
முடிவிலியாகி
சிங்களத்து பிடியில்
தமிழர் நாடித்துடிப்புகள்
தொக்கி நிற்கிறது..

இருந்தும்!!!
எஞ்சியிருக்கும் உயிரோடு
உரிமைகள் கிடைக்கும்-என்ற
நம்பிக்கை கொண்டு
தமிழர் சுவாசங்கள்
இன்றும் சுவாசித்துக்கொள்கிறது..
நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!

செம்பகம்










9.8.11

எதற்கோ தெரியவில்லை..?























அபிவிருத்திகளோ உச்ச வேகத்தில்
நடந்தேறிய வண்ணம் .-ஆனால்
அடிவைக்கும் இடமெல்லாம்
கையில் பேணியுடன்
அங்குமிங்குமாய்..

இருக்கும் அறையைவிட்டு
வெளிப்புறமாய் கால் வைத்தால்- மனம்
வலிக்காமல் திரும்பியதில்லை
ஒரு நாளும்...

ஏராளம் கேள்விகளோடு
அந்தரிக்கும் மனதை
அடக்க முடியாமல்
சிந்தித்துக்கொண்டே
பஸ் தரிப்பிடத்தை
தவற விட்டதுமுண்டு..

தோல் சுருங்கி
தொண்டைக்குழி உள்விழுந்து
சுவாசிக்கக் கூட
சக்தியற்ற நிலையில்
முதியவர்கள்...

பச்சிளம் குழந்தையை
பக்கத்தில் சரித்துவிட்டு
கிழிசல் உடைகளோடு
பெண் ஜீவன்கள்...

அங்கங்களை இழந்து
இயங்காத குறையோடு
பார்க்கவே முடியாத
பரிதாப நிலையோடு
பலர்..

கண்ணில்லை..
காலில்லை..
கையில்லை...
ஆனால் பாடுவதற்கு
குரல் இனிமை..
கௌரவக் கையேந்தல்கள்
ஒரு பக்கமாய்..

மன நோயால் பாதிப்படைந்து
மனம் போன போக்கோடு
பல மனித உலாவல்கள்..

இப்படி இப்படியாய்
அங்கும் இங்குமாய்
விதைக்கப்பட்டு கிடக்கிறது
மனிதப்பிறப்புக்கள்..

ஓயாத போர் நடந்த
நம் நாட்டில்
இதே நிலையில்-எம்
மக்கள் எவரையும் கண்டதில்லை
எம் கண்கள்...
எல்லாமே!!
எங்கள் சூரியதேவனால்
கட்டி அமைக்கப்பட்ட
அதிசய வழிப்படுத்தல்...
திட்டமிடல்கள்...
உடலை சிலிர்க்கத்தான் செய்கிறது..
நிரந்தர நாடொன்றாய்
தமிழீழம் கிடைத்திருந்தால்
வியக்கும் வழியில்
நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
சந்தேகம் ஏதுமில்லை...


மனம் வலித்தாலும் -அதில்
ஓர் பெருமை எனக்குள்ளே-பின்னர்
அடுக்கடுக்கான பெருமூச்சுடன்
எங்கெல்லாம் போகும் நினைவுகள்...
கட்டிவைத்துக் கொள்கிறேன்
பத்திரமாய் இதயத்துள்....


பாதைகளை நோக்கியபடி!!!!



செம்பகம்

27.7.11

காத்திருப்பின் தகிப்பு.





காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...

சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..

நீழ்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..

வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...

நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..

இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..

எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!

செம்பகம்

22.7.11

அடங்காத கொதிப்பு....



















மூச்சுவரை வந்த சுவாசம்
முழுதாய் முடங்கிப்போகிறது
தொண்டைக் குழியோடே..!!!!!
உள்ளக் கொதிப்பால்
உடலோ பற்றியெரிகிறது..

தமிழர் வல்லமையின்
தடம் பதித்த
முத்தான வெளியில்
மூதேவி ஒன்று
தாண்டவம் ஆடியதாம்..!!!
எங்கள் உயிர்களின்
எச்சங்கூட மிச்சமில்லாமல்
உறிஞ்சிக் குடித்த
பிணந்தின்னி கழுகு..
பிச்சை கேட்கிறதாம்..

கும்பிடக் கும்பிட
கொன்று குவித்தவர்..
உயிரோடு கருகிப்போக
குண்டுமழை பொழிந்தவர்...
நச்சு வாயுக்களால்-எங்கள்
மூச்சையே நின்றிடச்செய்தவர்..
சந்ததியே இல்லாமல்
கூண்டோடு அழித்தவர்..
பெற்றவரைத் தின்று
அனாதை பட்டத்தை கொடுத்தவர்..
அழகான பிறப்புக்களை
அங்கவீனர் ஆக்கிய
அட்டூழியக்காரன்...
வரலாறுகள் வாழ்ந்த
வீடுகளை கிண்டி கிழறியவர்..-இப்போ
எங்கள் கோட்டையில்
ஏறி நின்று
என்னையா கேட்கிறீர்???














அவரை வரவேற்க
அறுபத்தெட்டு நம்மவர் !!
ஏனோ போயினர்??
இதுவரைக்கும் புரியவில்லை..

ஐயாவை பார்க்க ஒரு பகுதி..
நடக்கும் நாடகத்தை
விடுப்புப் பார்க்க ஒரு பிரிவு..
வற்புறுத்தலின் அச்சத்தில்
சில பாவிகள்..
எதுவுமே அறியாதவர் ஒரு கூட்டம்..
இப்படியே குவிந்திருக்கும்..
சில கூட்டம்..
அப்படி இருக்கலாமோ???
இது என் சிந்தனை


எங்கள் கடவுள்கள்
எப்போதோ தொலைந்து போனார்கள்..
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்பு கொள்வார்களோ
அதுவும் சந்தேகம் தான்...

முத்த வெளியிலேயே ஐயாவுக்கு
மூச்சுத்திணறல் வந்திருக்கக் கூடாதோ?
நீதி இறந்து போனதால்
இவர்கள் நீடுழிகாலமும்
வாழ்வார்கள் போல்...
அக்கிரமங்கள் கட்டவிழ்க்க கட்டவிழ்க்க
ஆயுளும் அதிகரிக்குமோ ??
ஐயங்களோ அடுக்கடுக்காய் மனதில்
ஐயாவை நினைக்கையில்..

காலம் பதில் சொல்லுமென
காத்திருந்து களைத்தாச்சு..
கண்ணீரை மட்டும்
வழியவிட்டு
கண்ணீர் வற்றியது தான் மிச்சம்..
நடந்ததாய் எதுவுமில்லை..
படுகொலையின் நாயகனுக்கு
பாடையில் ஏற்றுவது எப்போதோ?
மண்கூட இவர் உடலை
உக்கி எடுக்க மறுக்கும்..
அப்படியான மனிதர்க்குத்தான்
இப்படி வாழ்க்கை..
வந்த பெருமூச்சை மட்டும்
பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
என்ன செய்ய !!!!!

செம்பகம்

19.7.11

நீயே என் முதற் கவிதை





முதன் முதலாய் பாடிய 
முதற்கவிதையே அம்மா 
உனை வரிக்க 
வடிவெடுத்த வார்த்தைகளோ  
வரிசைகளாய்...........

சுமையோடு சுமந்து
சுமை தாங்கியானாய்..
பத்து மாதம் தான் -எனை
பத்திரமாய் சுமந்தாய் அல்ல ,,,
இப்போதும்,,,-என்
சுமைதாங்கும் தூண்தானே
நீ அம்மா..

உன்.........
கற்பனைக் கருவறையுள்
கருத்தரித்த கனவுகளோ
கடலைப்போல் என்றாய்
அத்தனையும் .......
நடந்ததும் நடக்காததுமாய்...
நகர்கிறது உன் ஏக்கம்...

வாழ்க்கையோடு காலம் 
வலிந்திளுக்கும் யுத்தத்தில்
வலிமையோடு வாழ 
வழிகள் பல 
கற்றுத் தந்தாய்..
வாழ்கிறேன் என்றாலும் 
முடியவில்லை என்னால்..

உதைத்து உதைத்து
உருண்டு புரண்டு -உன்
உயிர் வாங்கிய போதும்
உனக்கு வலி எடுத்திருக்கும்-ஆனால்,,,
ஈரைந்து மாதமும்
உவகையோடுதானே காத்திருந்தாய் -அதனால்
உனை உதறிச்செல்ல 
உளம் மாற்றிய 
சூழல்கள்... அத்தனையும்
தூக்கி எறிந்தேன்..
ஏனெனில் நீ
உடைந்து போவாய் என்பதற்காய் !!!
உன் கரம் பற்றி வாழ்கின்றேன்...

விலகி வந்த போது 
விதியென்று நினைத்தேன்..
பிரிவு எம்மை 
பிரித்து வைத்தாலும்
அதை வெல்ல 
பாதைகள் தேடுகிறேன்..
காத்திருப்பாயா எனக்காய்!!!

ஏற்றங்களில் ஏறும் போது
பெருமையடைந்தேன் உன் பிள்ளையென்று..
வாழ்க்கை வலித்த போது
வாய்விட்டு கேட்டேன்...
ஏன் என்னை பெற்றாய் என்று!!!
சிரித்த முகத்துடன்
தந்தாய் வரைவிலக்கணம்..
தோல்வியும் துன்பமும்  
தோளின் மேல் குந்திய போதும் 
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,
















அன்னையே நீ 
அருகிலில்லாத தனிமை
வெறுமையான ஒன்றாய் 
வெறுத்துக்கிடக்கிறது...
எட்ட நின்றிடினும் 
தொட்டுவிடு ...உன்
நுனி விரல் தீண்டும் ஸ்பரிசம்
அதுவே போதும்..

அதிக பிரியம் இருப்பதாலோ-உன்
அருகில் வாழ வரமற்றேன்...
அதிசயப்பிறவியே,,,
அற்புதமான அப்பாவை கைப்பிடித்து
அருமையான உடன் பிறப்புக்களை
பரிசளித்தாய்...
நன்றி சொல்ல 
வார்த்தைகளோ என்னிடம் இல்லை ...

சேந்து வாழ முடியாததால் 
சோர்ந்து போகவில்லை-ஏனெனில்
மறுபடியும் உன் கருவறையுள்
எனை அணைத்துக்கொள்வாய்.....
நித்தமும் உன்
நிழலோடு வாழ்வதற்கு,,,


செம்பகம்


உறவுகளே! நான் தற்போது இன்ரனெற் வசதியற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
கிடைத்தவுடன் உங்கள் பக்கம் வருவேன்..

10.7.11

இருண்டு கிடக்கும் வாழ்வில் ஒளியேற்ற வாரீர்...!!!!!

உறவுகளே இந்த வீடியோவைப் பாருங்கள்...
பார்த்த பின் கவிதையை வாசியுங்கள்....
இப்படி ஏராளமான சகோதர/சகோதரிகள் 
மண்ணுக்காக போராடி அங்கங்களை இழந்து தவிக்கிறார்கள்...
அவர்களுக்காக எனது மன ஆதங்கத்தை பகிந்து கொள்கிறேன்....











மனிதம் எப்போதோ
மரத்துப் போனதால்
அணுவணுவாய்
மரித்துக்கொண்டிருக்கிறது -இவர்கள்.
ஆன்மா!!!

சகித்துக் கொள்ள
சக்தியோ........
சத்தியமாய் எனக்கில்லை,,,,,,,,
இரத்தக் கண்ணீரின்
இறுகிய கறையை போக்க
எந்த மனம் இவ்வுலகில்...

பத்திரமாய் பிரசவித்து
பொத்திப் பொத்தி
வளர்த்த கனவுகள்..
செத்துக் கிடக்கும்
பெற்றவரோடு!!!!


இனப்பசிக்காய்
இரை தேடிய இவர்கள்-இப்போ
நிர்கதியிழந்து- இவர்கள்
பசிபோக்க யாருமின்றி!!!!
கண்ணீரின் கதையாகி நிற்கிறது...


பட்ட காயங்கள்..
பறி கொடுத்த அங்கங்கள் ..
உதிர்ந்து போன வாழ்க்கை..
இழந்து போன உறவுகள்...
இத்தனையும் தாண்டி
முடிவின் நுனியை
முட்டும் வரை -இந்த
பூமியில் வாழும் வலியே
மிகக் கொடுமை !!!


மனிதனை மனிதன்
யாசிக்காததால்..
மனங்கள் வலிப்பதை
மனிதன் யோசிப்பதில்லை!!!!

உடலில் பட்ட - சிறு
காயங்களை காட்டி
ஒதுக்கிச்செல்லும்-இந்த
உலகில்!!!!

இரு கரம்...
இரு கால்
இரு கண்...
மொத்தமாய்ச்சொன்னால்
அங்கங்களையே பறி கொடுத்து
அங்கலாய்க்கும் உறவுகளின்
கதிதான் என்ன?
இவர்கள் எதிர்காலத்தை
கை நீட்டி தூக்க
எந்த கடவுள் கைகொடுக்கும்?

சிறகு உதிர்ந்து
புன்னகை இறந்து
வாழ்வின் இன்பங்கள்
முடிவுற்று நீழ்கிறது...!!!


சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகிப் போனதால்
சாகும் வரை
சகித்துக் கொள்ள
காலம் பணித்து
ஏறி மிதித்து நிற்கிறது...


ஈழம் அன்று கிடைத்திருந்தால்
பொன்னாடை போர்த்தி
புகழ்ந்திருப்பார்....
விடுதலையின் அடையாளங்களாக
வீர மிடுக்குடன் மிளிர்ந்திருப்பார்...
இன்று கண்ணீரை மட்டும்
பரிசாக கொடுத்து விட்டு
ஏக்கத்தோடு வரலாறும்
எட்டிப்பார்க்கிறது!!!!

நிறைவேறாத வேட்கையும்
நிறைந்து போன துயரமும் 
நீழ்கின்ற தனிமையும்
நெடுத்துப் போய்
காய்ந்து போன சருகுகளாய்
உலர்ந்து கிடக்கிறது
இவர்கள் மனங்கள்!!!!


இறந்து கொண்டிருக்கும் இவர்களை
உயிர்ப்பித்து விடுங்கள் உறவுகளே
இருண்டு கிடக்கும் வாழ்வில்
ஒளியேற்ற வேண்டும்....!!!!!


செம்பகம்

6.7.11

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....







சப்தங்களற்ற இரவுகளின்
மௌனங்களையே தின்று வாழும்
உன் பொழுதுகள்.........
இருளுக்குள் நிலவும்
இரகசிய நடப்புகளை
விழித்திருந்து இரசிக்கும்
உன் தனிமை.........
என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


முகில் கூட்டம்
முழுதாய் உரசி போகையிலும்
சீற்றமின்றி நீயிருக்கும் அந்த
காட்சி..........
உனக்கும் முகிலுக்கும் ஏதும் மறைமுக உறவோ?
எனக்குள்ளே சிறு கேள்விகளாய்..........

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


நிலவே நீ
சூரியனை கண்டதும்
சட்டென மறையும்
ரகசியம் தான் என்ன......?
எனக்கு மட்டும்
செவியூடே சொல்லாயோ?
வானத்தோடே மட்டும்-நீ
நிரந்தரமாய் வாழ்கின்றாய்........
வானுக்கும் உனக்கும்
ஏதும் நட்புறவோ?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....


பசுமையைத் தொலைத்த
பட்ட மரங்கள் -உன்
முகம் கண்டு பிரகாசிக்கிறதே.......
சூரியனைக்கண்டு
சாய்ந்த புல் வெளிகள்
பூத்துக்குலுங்குவதாய்
ஒரு தோற்றம்.......
தடி காட்டி
உணவருந்தும் குழந்தாய்
உனைக்கண்ட கணமே
உண்டு தீர்க்கிறதே...
அதற்கான உன் பாசைதான் என்ன?

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



இறுக்கமான தருணத்தில்
இயல்பாய் மகிழும் பொழுதுகள்
நிலவே உனைக்காணும் போதே........
பகலில் உலவும் நிழல் கூட
எனை விட்டு பிரிகிறது
நிலவே உன்
நினைவு மட்டும்
எனை விட்டு பிரிய மறுக்கிறது....

என்னமோ.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.....



செம்பகம்


4.7.11


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

24.6.11

லெப்.கேணல் புரட்சிநிலா.

              லெப்.கேணல் புரட்சிநிலா






                    
விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா.
அவரில்  நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை.     
       
  ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன் ஒரே அருமை மகளாக கிளிநொச்சியில் பிறந்தார்.பெற்றோரின் ஊக்குப்விப்பாலும் தனது ஆர்வத்தாலும் கல்வியில் சிறந்து விளங்கி புலமைப்பரிசு பரீட்சையில் சித்தியடைந்து தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.  சிறு வயதிலிருந்தே விடுதலை தொடர்பான விழிப்புணர்வும் நாடென்ற பற்றுணர்வுடனும் வாழ்ந்தவர் 1999ல் விடுதலைப்பயணத்தில் தடம்பதித்தார்.                                                
                                                       
மாலதி படையணியின் யாழினி 2                              பயிற்சிபாசறையில்அடிப்படைப்பயிற்சியைமுடித்து
இவரதுஅறிவுக்கூர்மையால் முன்னிலை நோக்குனராக
 நியமிக்கப்படார் அந்த காலப்பகுதியில் வன்னியில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின்
 மாபெரும் யெஜசிக்குறு இராணுவ
 நடவடிக்கை வன்னி மண்ணையே உலுக்கிஎடுத்தது.
அதனைஎதிர்கொள்ள அம்பகாமம் என்ற இடத்திற்கு
இவர் ஏனையபோராளிகளுடன் அனுப்பப்பட்டார்.
இவரது முதற்களமானஅங்கு மிகத்திறமையான 
துணிச்சல் உள்ள போராளியாக இனங்காணப்பட்டார்.                                                                            
 2000ஆண்டு காலப்பகுதியில்2ம் உலகப்போரில்
நடத்தப்பட்ட நோமண்டிதரையிறக்கத்திற்கு ஒப்பானதும்  
தமிழீழ விடுதலைபோராட்ட வரலாற்றிலே மிகப்பெரிதானதும் எதிரிக்கு கொடுத்த பாரிய அடியுமான களங்களில் ஒன்று குடாரப்பு தரையிறக்கம் .
                                                     


      
அங்கு தனது படையணியான மாலதிபடையணியின் 
பூமி நிலைகாண்தொகுதி  [GPS]ஆழுனராக ஒருபகுதி அணிகளின் வழிகாட்டியாக ஓயாத அலைகள் 3 என்று 
பெயர்பொறித்த அச் சமரிற்கு  களமிறங்கினார்.நான்குபக்க 
எதிரியின்முற்றுகைக்குள் பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில்
 மிகச்சிறப்பாக சிறிலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான 
முன்னேற்ற நடவடிக்கையை ,எதிர்கொண்டு
உணவுக்கும்தட்டுப்பாடான,குடிப்பதற்கும்,குளிப்பதற்கு
நீர் கிடைக்காத  வசதியற்ற இடத்தில்சாதனை படைத்த
 போராளிகளில் இவரும் ஒருத்தி.அசைக்கமுடியாத 
இரும்புக்கோட்டை என்று சிறிலங்கா இராணுவத்தால்
 வர்ணித்த ஆனையிறவுக் கோட்டையை இந்த
 பெட்டிச்சமர் ஊடாக மீட்டெடுக்கப்பட்டது.இந்த வெற்றி 
உலகமெங்கும் பேசப்பட்ட வெற்றியாகும்.இந்த களத்தை
 முடித்துக்கொண்டு ஓயாத அலைகள் தொடர்ச்சி
 யாழ்ப்பாணம் வரை நீண்டது.தனங்கிளப்பு தரையிறக்கத்தால்  சாவகச்சேரி,அரியாலை ,நுணாவில் ,இப்படி விரிந்து கிடந்த களங்கள் யாவும்தனது கருவியுடன்  இவர்  உழைத்தார்.
 
2001ல் அணித்தலைவர்களுக்குரிய அதிகாரிகள் கல்லூரியை முடித்து சிறிலங்கா இராணுவத்தின் மீண்டும் 
ஆனையிறவைமீட்பதற்கான மிகப்பெரும் முன்னேற்ற 
நடவடிக்கையானதீச்சுவாலைச்சமரில் இவரும் அணியோடு
 நகர்த்தப்பட்டு களமாடினார்.அதன் பின் நாகர் கோவில்
 பகுதியின் முன்னரணிற்கு தனது கருவியுடன்
 எல்லை காத்தார்.                 

 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் 
சிறிலங்கா இராணுவத்திற்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் 
கைச்சாத்தாகியது யாவரும் அறிந்ததே.அக்காலப்பகுதியில் 
படைக்குத்தேவையான அதிமுக்கியமான அறிவுகளில் வரைபடம், பூமிநிலைகாண்தொகுதி என்பனவும் அடங்கும்.இதனைக்கற்பிக்கும் ஆசானாக இவர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.பல அதிகாரிகள் 
கல்லூரியையும் ,பல முன்னிலை நோக்குனர் கல்லூரியையும்
இவர் தலைமையில் நடாத்தி பல திறமையான போராளிகளை உருவாக்கினார்.தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனிடமும்பல பாராட்டுக்களையும் ,பல பரிசில்களையும் பெற்றுக்கொண்டார்.


 புரட்சி கற்பித்த அதிகாரிகள் கல்லூரியில் ஒரு அணியுடன்........ முதலாவதாக நிற்கும் கட்டை உருவம் லெப்.கேணல் புரட்சிநிலா                                                 



இவ்வாறாக விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே நடாத்தப்பட்டவிளையாட்டுப்போட்டிகள்.கலைத்துறைப்போட்டிகள்அனைத்திலும் பங்குபற்றி அதில் வெற்றியீட்டி படையணிக்கு பெருமை சேர்த்தார்.கவிதை வாசிப்பதில் இவரை மீறியது யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் ,ரி.ரி.என் 
தொலைகாட்சியில் இவரது கவிப்பயணமும்  வேறும் பல 
நிகழ்வுகளும் வெளிவருவதால் கூடுதலான மக்கள் 
போராளிகளிற்கு இவர் அறிமுகமாகினார்.







   தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் வெளிவந்த புரட்சியின் கவிப்பயண ஒளிநாடாவின் படம்........  

                        இதற்கு இடையே 2003ல் தமிழீழ விடுதலைபுலிகளின் 
பிரிவினைவாதம் துரோகி கருணாவால் ஏற்படுத்திய போது
 மடக்களப்பிற்கு அதனை முறியடிக்க வன்னியிலிருந்து அணிகள் 
நகர்த்தப்பட்டபோது புரட்சிநிலாவும் ஜி.பி.எஸ்[GPS] கருவியுடன் 
அணிகளின் வழிகாட்டியாக நகர்த்தப்பட்டார்அங்கு அதனை
 மிகச்சாதுரியமாக முறியடித்து விட்டு மீண்டும் அணிகள் 
வன்னிக்கு நகர்ந்தன.புரட்சியும் நகர்ந்தார்.                




இந்நிழல்படம் மட்டக்களப்பில் துரோகி கருணாவின் பிரிவினைவாதத்தை ஒழிக்க சென்றபோது எடுக்கப்பட்ட படம் .சக போராளிகளுடன் இடது பக்கத்திலிருந்து 2வதாக பச்சை நிற செக் சேட்டுடன் லெப்.கேணல் புரட்சிநிலா.





 11.08.2006ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ
விடுதலைப்புலிகளின் யாழ் நோக்கிய வலிந்த தாக்குதலில் மாலதி படையணியின் சிறப்புத்தளபதியும்,விடுதலைப்புலிகளின்
மகளிர் தளபதியுமான பிரிகேடியர் விதுசாவிற்கு
வரைபடவியலாளராகவும் ,அவரின் மெய்ப்பாதுகாவலருமாக
 நின்று அணிகளின் நகர்விற்கு வழிசொன்னார்......

                                 2007ம் ஆண்டு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை மன்னார்ப்பகுதியில் தொடங்கியபோது அங்கே மாலதிபடையணியும்
பரந்த பல பகுதிகளை தக்கவைத்தது.அங்கே லெப்.கேணல் புரட்சியும் நகர்ந்தார்.இரவு பகலின்றி பலகிலோமீற்றர்கள் நடந்து அணிகளிற்குத்தேவையான அனைத்துத் தேவைகளையும்
 சிறப்புத்தளபதியின் ஆலோசனையுடன் அத்தனையும்
 நிறைவேற்றி வைப்பார். குட்டித்தளபதியென ஏனைய
 தளபதிகள் மத்தியிலும்,ஏனைய படையணி
போராளிகள் மத்தியிலும் அழைக்கப்பட்டார்.
களத்தில் கட்டளை அதிகாரிகளிற்கு  இடைவெளிகள்
ஏற்படுகையில் அதனை நிரப்பிட எந்தவித சலனமின்றி  ஓடோடிச்செல்வார்.போராளிகளுடன் அன்பாகவும்
அவர்கள் பிரச்சனைகளை விளங்கி ஆதரவாகவும்
 நடந்து கொள்வதில் மிக உச்சம் இவரது பண்பு.
பெரியவர்களிற்கு கொடுக்கும் மதிப்போ அளவில் கடந்தது.  
உருவத்திலும் ,வயதிலும் ஏனைய அதிகாரிகளை
விட சிறியவர். ஆனால் ஏனைய போராளிகள் மத்தியில்
பெரும் புகழுடனும் ,மதிப்புடனும்,ஆசானாகவும்
 செல்லப்பெயருடன் புரட்சி என்று அழைக்கப்பட்டார்.


தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 
மனதில் இவரது கவித்துவ ஆற்றலாலும் ,கலைத்துவ
 ஆற்றலாலும் முதல் முதலாக இடம்பிடித்தார்.
பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனால்
 செல்லமாக  அரசியல்  என்று அழைக்கப்பட்டார் .


இவ்வாறாக தேசியத்தலைவர்மத்தியில் இடம் பிடித்தவர்
 சக போராளிகள் மத்தியில் எப்படி நடந்திருப்பார் புரட்சி ...? 
களத்தில் கிடைக்கும் சிறு ஓய்வில் கவிதை எழுதி
வெள்ளிநாதத்திலும்,ஏனைய விடுதலைப்புலிகளால்
வெளியிடப்படும் சஞ்சிகைகளிற்கும் புலிகளின் குரல்
 வானொலிக்கும் தனது ஆக்கங்களை அனுப்பிவைப்பதில்
 தவறுவதில்லை.     களத்தில் நின்றுகொண்டே
அணித்தலைவர்களை உருவாக்கும் அதிகாரிகள்
கல்லூரிகள் பலவற்றை இவர் நடாத்தி அவர்களுக்குரிய
அத்தனை அறிவையும் புகட்டி சிறந்த அணித்தலைவர்களாக
வெளியேற்றி வைத்த வரலாறு இவருக்கு நிறையவே உண்டு.
பெரும் தளபதிகளிற்கு கூட இவர் கற்பித்திருந்தார்.
இவரின் கற்பித்தல் திறமை  மிக வித்தியாசமானது.
விளங்க முடியாத அனைத்தையும் விளங்க வைப்பதில் புத்திசாலி.விளையாட்டில் என்றால் சொல்லவா
 வேண்டும் கட்டை உருவம் என்றாலும் கரப்பந்தில்
பாய்ந்து பாய்ந்து அடிக்கையில் பார்ப்பவரை சிலிர்க்க
வைக்கும் இவரது விளையாட்டு.இப்படி இப்படி புரட்சியில்
நிறைந்து கிடந்த திறமைகள் ஏராளம் ஏராளம்.
என்னால் எழுத முடியவில்லை.தமிழீழ தொலைக்காட்சி
 பார்த்திருந்தால் புரட்சியை அறிந்திருப்பீர்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளிவந்த விலை
 என்ற படத்தில் புரட்சியும் நடித்திருந்தார்.
மாலதி படையணியால் வெளியிடப்பட்ட பாடல்
 ஒலிப்பேளையான  வெஞ்சமரின் வரிகள்,
வரலாறு தந்த வல்லமை போன்ற பாடல் ஒலிப்பேளையில்
 அறிமுகக்குரல் கொடுத்தவரும் புரட்சியே.
இப்போதும் அழியாமல் சில நிகழ்வுகள் இன்டெர்னெட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
        
                              இவ்வாறாக எந்த ஓய்வுமின்றி களத்திற்குள்ளே
 நித்தமும் வாழ்ந்தார். மன்னாரில் தொடங்கிய இராணுவ நகர்வு
 இடைவிடாது தொடர்ந்து வன்னிமண்ணையே ஆக்கிரமித்தது
 யாவரும் அறிந்ததே.ஒவ்வொரு போராளிகளின் இழப்பிலும்
ஒவ்வொரு அடி நிலத்தை இழந்துகொண்டு போனபோதும் மன ஆதங்கப்பட்டார்.கரும்புலிகள் அணிக்கு தனது விருப்பின்
 படியே 2002ம் ஆண்டு விண்ணப்பித்த போது தேசியத்தலைவரால் காத்திருக்கும்படி பதில்வந்தபோது  அதற்காகவே பல
 ஆண்டுகளாகவே  காத்திருந்து அடிக்கடி கடிதம் எழுதி
 கரும்புலிகள் அணியில் இணைக்கும்படி தொல்லை
 கொடுத்தும் இவர் அதுவரைக்கும் இணைக்கப்படவில்லை.
படையணி சிறப்புத்தளபதியால் இவரை அனுப்ப அனுமதிக்கவில்லை.
இவரது திறமைகள் அவ்வளவிற்கு விரிந்து கிடந்தது.தமிழ் மக்களை உளப்பூர்வமாக யாசித்தார்.எம்மினத்திற்கென்றொரு நாட்டை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வார்த்தை இவரது
 உள்ளத்திலிருந்து அடிக்கடி வெளிவருபவை.
 
               விடுதலைபோராளிகளை பொறுத்தவரை ஓய்வு என்பது
இறந்தபின்பு தான் என்ற கூற்றிற்கு இலக்கணம் வகுத்தவர்களில்
 புரட்சியும் ஒருத்தி. பல களங்களைக்கண்டு குண்டுமழைக்குள்
 குளித்தவர் .பல சந்தர்ப்பங்களில் உயிர்போகும் நிலையில் கூட
சாதுரியமாக தப்பித்து வந்த வரலாறுகள் நிறையவே இவருக்கு
உண்டு.   ஆனால் இவர் உடம்பில் சன்னங்களால்  விழுப்புண்கள்
எதுவும் பட்டதில்லை.அடிக்கடி சொல்வார்.

"எனது உடம்பில் சின்னக்காயம் கூட எதுவும் இல்லை.
நான் ஒரேயடியாய் போடுவன்"என்று கன்னத்தில் குழி விழ
ஒரு அசத்தல் சிரிப்பொன்று சிரித்துநிற்பார்.

               இவ்வாறாக  தொடர்நெருப்புமழைக்குள் நின்று 
வாழ்ந்தவர் மன்னாரில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை
 இப்போ ஆனந்தபுரம் வரைக்கும் வந்துவிட்டது.முள்ளிவாய்க்கால்
 இறுதி   களம்.அதற்கு குறுகிய தூர மாகத்தான் இருந்தது.
அதுவரைக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்
உயிர்கள் சிறிலங்கா இராணுவத்தால் பறித்தெடுக்கப்பட்டதும்,காயப்படுத்தப்பட்டு உயிருக்காய் போராடிக்கொண்டிருப்பதும் நேரில் கண்டு கண்ணால்
நீர் வழிய இதற்கு ஒரு முடிவு கிடைக்காதா?
என்ற ஏக்கத்துடன் சக போராளிகளுடன்
கதைத்துக்கொள்வார் லெப்.கேணல் புரட்சிநிலா  .  
  ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் விதுசாவின் கட்டளை
 நிலையத்தில் நின்ற புரட்சிநிலா முன்னணி நிலையில்
அணிகொண்டு செல்ல வேண்டிய தேவை வந்தபோது.....................................................
எறிகணைத்தொடர்மழைக்குள்ளும்,சீறிவரும்
துப்பாக்கிச்சன்னங்கள் நடுவிலும்  சிரித்த முகத்துடன்
போட்டுவாறேன் என்று விரைந்து சென்றவர்
 !! யாரும் நினைத்திருக்கவில்லை..
அன்றைய அவளின் புன்னகை,
இறுதிப்புன்னகையென !!!!!!! 
அன்று நடந்தஆனந்தபுரச் சமரில் மிகத்திறமையாக
அணியை நடத்திக்கொண்டிருந்தவள் எதிரியின்
குண்டில் கடுமையாக காயப்பட்டு வைத்தியசாலைக்கு
 அனுப்பப்பட்டபோதும் எங்கள் புரட்சியை காப்பாற்றவே
 முடியாமல் போய்விட்டது....களத்திலிருந்து ஏனைய
போராளிகளை விட்டுவரமனமின்றி  துடித்த புரட்சி
சுய நினைவு குறையும் வரையும் கூடநின்ற  போராளிகளின்
மனங்களைத் திடப்படுத்தி அறிவுரை சொல்லியே தனது 
சுய நினைவிழந்தார் .
30.03.2009 அன்று
 
கடற்கரையின் அமைதியும்
 
வீசிய காற்றின் துடிப்பும்
 
வெப்பத்தைக்கக்கிய
சூரியனின் கதிர்களும்
உணர்விழந்ததாய் -ஏதோ
புரட்சியின் இழப்பின்
 துயரைச்சொல்வதாய்
இயற்கையே  மௌனித்துநின்றது..
மண்ணுக்காக உழைக்கும் வரை உழைத்து ஏக்கத்தோடே
 விழிமூடிக்கொண்டார்  லெப்.கேணல் புரட்சிநிலாவாக!!!!!
களத்தில்…. மாலதிபடையணியின்  ஒட்டுமொத்த கட்டளைப்பீடத்தின் கட்டளையதிகாரியாக தளபதியின்ஆலோசனையாளராக,
வரைபடவியலாளராக,பூமிநிலைகாண்தொகுதி ஆளுனராக ,
படையணி ஆசானாக,கலைஞராக,சிறந்த பேச்சாளராக,
கவிஞராக களத்தின் சாதனையாளியாக ,வீராங்கனையாக
இவர் வாழ்ந்து தனது புகழை இவ்வுலகில் விட்டுச்சென்றார்.  
தமிழீழம் என்ற தனிநாட்டுக்காகவும் ,தமிழர் உரிமைக்காகவும்
 உழைத்து தம்மை அர்பணித்த தியாகிகளில் புரட்சியும்
ஒருத்தியாய் இன்றும் ஒவ்வொரு தமிழர் மனங்களிலும்
 வாழ்கின்றார்.






இந்த கையெழுத்து லெப்.கேணல் புரட்சிநிலாவினுடையது!!!!

நண்பர்களே எனது  கல்லூரி உயிர் நண்பியின் நினைவாக 
அவரது வரலாற்றை சிறிதாக உங்களிற்கு பகிர்ந்து கொள்ள 
நினைத்தேன்.......முழுதாக பதிவுசெய்தால் வாசிப்பதற்கு 
உங்களிற்கு சிரமம்..அதனால் சிறு சிறு பகுதியாக வெளியிட
 நினைத்தேன்..

செம்பகம்.....