23.3.10

புரிதல்களின் தவறு வலியானதே .........



















உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீ
நிச்சயமாய் மறுக்க முடியாதவை

எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....

உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????
வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும்
மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!

மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்,.........
நீ தந்த முத்தம்..........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!

என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......

இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......

தூங்கும் இரவுகள் முழுதும்
தின்றுவாழும் உன் நினைவுகள்......

தூக்கத்தையே தொலைத்து
புரண்டு புரண்டு
படுத்த சாமங்கள்.....

காற்சட்டைக்குள் பத்திரப் படுத்திய -உன்
காகித கிறுக்கள்கள்....-அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............

சாவின் விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தே
தப்பித்த பொழுதுகள்.....

தொலை பேசியே பேசமுடியாத
தொலைவில் வாழ்ந்த போதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
பத்துமாதம் சுமந்தவளை தவிர்த்து
உன்னோடு மட்டும் உரையாடிய நேரங்கள்....

இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தை
எண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
















நீ அனுப்பிய

நினைவுப் பரிசுகள்....

பிரியங்கள் பகிர்ந்த
காகித மடல்கள்...-உன்

நிழற்படங்களைத் தாங்கிய
சேகர ஏடுகள்.........

சேகரித்து வைத்த
என் கரங்கள்....

எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!

எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....

உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!!!!!!!!!

செம்பகம்


நண்பனின் உண்மைச்சம்பவத்தை வரிகளாக்கினேன்.


























9.3.10

புதிய கிளிநொச்சி


















அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ

உறக்கம் அறியா-எங்கள்
ஊர்களின் மெளனம் தான் என்ன..?
பட்டுப் போய் கிடக்கும்-என்
பழைய ஊரே
கிளிநொச்சி மண்ணே-நீ
கிலி கொண்டு இருப்பதேனோ...?
உன்னில் கொட்டுண்டு கிடக்கும்
அத்தனை அழகும் எங்கே...?

சாலையோரம் உயர்ந்து நின்ற
கட்டடங்களே...........
டிப்போ பேருந்து தரிப்பிடமே...
யாருக்கு ஏது செய்தீர்
தெருவின் ஓரம்
சிரித்து நின்ற
சந்திரன் பூங்காவே
உன்மீதும் புதியதோர் சிலையா..?
சிங்கள வெறியன்
நினைவுத் தூபியாம்
நீ அதிர்ந்தாவது
வீழ்த்திடமாட்டாயா..?

இதமிதமாய் குளிரவைத்த
சேரன் பாண்டியன்
சுவையூற்றுக்களே
உங்கள் அத்திவாரங்கள் எங்கே...?
நீதி உணர்த்திய
தமிழீழ நீதிமன்றமே....-நீ
தப்பிழைத்ததாய் அறிந்ததில்லையே....

செந்தமிழில் பளிச்சிட்ட

பதாகைகளே......
சிங்கள மொழியில் மாறியதன்
காரணம் தான் என்ன...?
எம் தேச அரசமரமே
உன்னடியில் முளைத்திருக்கும்
சிலைதான் ஏனோ
நீயாவது சரிந்து
வீழ்ந்திடமாட்டாயோ...?

தேசத்து வாழ்வுக்காய்
தேகத்தைக் கொடுத்த
உத்தமர் ஆலயங்களே
இறப்பின் பின்னும்
நின்மதியில்லைநம் தேசத்தில்

வெறும் கற்கள்
உம்மை என்னையா செய்தன..?
மீண்டும் முளைத்துவிடும்
என்ற அச்சம் தானோ
சூழவிருந்த சுவர்கள்
துப்பாக்கி தூக்கி
சுடும் என்ற பிரமையா?

ஓடோடிவரம் வேண்டிய
தேவாலயமே,கோவில்களே
எம் மண்ணைக் காத்திடு என்று
கெஞ்சிக் கேட்டோமே
ஏன் கடவுளே தரமறுத்தீர்

ஆண்டவரே...
அலரி மாளிகையில்
அவலக்குரல் இனியும் கேட்கதோ..?
கும்பிட்ட தெய்வங்களே-நீங்கள்
மனிதர்களாக மாறிவிட்டீர்களா?
சத்தியமாய் கேட்கிறேன்
கோபம் ஒன்றும்
என்மீது வேண்டாம்
குமுறி வெடிக்கும்
உள்ளத்துத் துடிப்பால் பேசுகிறேன்

ஆயிரமாயிரம் உயிர்களை
துடிக்க துடிக்க
பிழிந்து குடித்தவர்
எப்படி இறைவா அவர்க்கு
இப்படி வாழ்க்கை
நீதி தவறி நடந்தவர்

கொடுமைகள் இழைத்தவர்
நிலைப்பது என்பதில்லை-இது
உலக நியதியே
இவர்க்கு மட்டும்
சுவர்க்கமா...?

ஆண்டவரே
நெருப் பெரித்தவர்க்கு
கொடுத்துவிட்டாய் தண்டனை
தீயெடுத்துக் கொடுத்தவர்கு
எப்போது சாவு
மனித உரிமை மீறல்களாம்
உலகம் முழுதும் வெளிச்சம்
விசாரணையாம்...!
எதுவும் நடந்ததாய் தெரியவில்லை
செத்துக் கிடக்கிறது நீதி

ஆதாரம் ஏராளம்-ஆனால்
அணு கூட அசைவதாயில்லை
பொய்யும் புரட்டும்
சுத்து மாத்துக்கும்தானா
மவுசு இவ்வுலகில்


மீண்டும் மீண்டும்
நரக வேதனையா தமிழர்க்கு
நரகத்திற்கு சென்றால்
தமிழர்க்கு அது பெரிதாய் தோற்றிடாது
என்று நான் எண்ணுகின்றேன்

தமிழர் மனங்களில் கொதிக்கும்
எரிமலை குழம்பு
ஓர் நாள் வெடிக்கத்தான் செய்யும்
பற்றியெரியும் நெருப்பு
விடுதலைத்தீயாய் பற்றும்
ஓர் நாள்......
வரண்டு போன என் மண்ணே
சிரிப்பாய் ஓர் நாள்..


செம்பகம்

3.3.10

ஓய்வறையோ ..அல்ல கழிப்பறையோ













நாட்டை விட்டு

கடந்து வந்தேன்
இறங்கி வைத்த
முதல் அடி
விமான நிலையம்
காண்பவர் எல்லாம்
வேற்று மொழியுடையோர்

எங்கு போய்
ஏது செய்வது
எதுவும் அறியேன்
கூட வந்தவர் பின்னே
ஓடோடி நடந்தேன்
இடை நடுவில்
திக்குத் திக்காய்
பிரிந்தார்கள் அவர்கள்

அருகில் வந்தவரிடம்
லைக்கேஜ் எடுக்குமிடம்
சைகையால் கேட்டேன்
எதிர்த்திசை நோக்கி
எளிதாய்க் காட்டினார்
கடவுள் புண்ணியமென
கட கடவென நடந்தேன்
அட பாவி...............
அவருக்கு விளங்கியது ஏதோ-அது
களிப்பறைக் கூடம்

பின்னால் வந்த கிழவனிடம்
வழியைக் கேட்டேன் -அவர்
சிரித்து விட்டு போனார்
என்னையா கொடுமை
யாரிடம் போய்
எப்படிக் கேட்க..?

நம்ம நாட்டில
இங்கிலீசு கதைச்சால்
இழிச்சிட்டு போவாங்க -எனக்கு
ஆங்கிலீசும் கம்மி...
மாறி மாறி அலைந்து
மண்டை வெடிச்சு
வெளிநாடோ........-அது
ஒரு நாளோடே
வெறுத்துப் போயிற்று

தேடி தேடி
றோட்டுக்கு வந்தேன்
கார் சாரதியிட்ட
முகவரியைக் கொடுத்தேன்
தன் மொழியில பேசினான்
என்ன விளங்கும் எனக்கு
அரை குறையாய்
விளங்க வைச்சு
ஏறி விட்டேன் வாகனத்தில


நெடு நேரமாய் நகருது
எங்க போகுதோ
நின்ற பின் தான் தெரியும்
ஓய்வறையோ ...........அல்ல
கழிப்பறையோ என்று !!!!!!!!


செம்பகம்