24.2.10

மீண்டும் மீண்டும் சோதனையா....?


















சொந்த நிலத்தின் சுகமிழந்து
சொந்தங்கள் பலவிழந்து
அகதிகள் பட்டியலோடு
ஆற்றமுடியா வலி சுமந்து
ஏக்கத்தோடு இருக்கும் உறவுகளே!
எங்கள் ஏக்கமூச்சு
எவருக்குத்தான் புரியும்

மூட்டை தூக்கி
மூன்று காசு உழைத்து
மண் உழுது
மாடாய் தேய்ந்து
உரமேறிய தேட்டங்கள்
அரங்கேறிய யுத்தத்தால்
நிலையற்றுப்போனது எம் வாழ்க்கைப்பயணம்

ஊர் விட்டு ஊர்மாறி
உயிரை மட்டும் காவி
ஆறி அமரமுன்னே
அடுத்தடுத்த பெயர்வுகள்......
ஓடினோம்..... ஓடினோம்...

அடுகடுக்காய் கூவிவரும்
அரக்கர் கணைகள்
பல்லாயிரம் உறவுகளை
பலியெடுத்தது
அவலக்குரலே கேட்காத
அதிகாலைக்காய் காத்திருந்தோம்

எங்கு பார்த்தாலும்
உடல்கள்
எதை எடுத்தாலும்
தசைச் சிதைவுகள்
எங்கு நகர்ந்தாலும்
குருதி வெள்ளம்
இறந்தவர் உடல்களை
தொட்டழ நேரமின்றி
பதுங்கு குழிகழுள்ளே
புதைத்துச்சென்றோம்

மொத்தமாய்ச் சொன்னால்
மரணத்தையே தின்று
மரணத்துள்ளே வாழ்ந்தோம்


இப்படியே ......
விலைகள் கொடுத்தோம்
விடுதலை கிடைக்குமென்றே

இன்றும் ........
முட்கம்பி வேலியுள்
முடக்கப்பட்ட கைதிகளாய்
கூடாரமே இருப்பிடமாய்
வரண்டு கிடக்கிறது - இந்த
மனித வாழ்க்கை

நீண்ட வரிசைக்குள்ளே
நீருணவுக்கு மட்டுமின்றி
கழிவுக்கூடத்துக்கும் காத்திருப்பு
இப்படியே
இராணுவ முற்றுகையுள் நகர்கிறது
எங்கள் நரக வாழ்க்கை

திரும்பிப் பார்க்கும் உலகே
தீர்வுகள் எமக்கில்லையா? - உனது
மனித உரிமைகள் எங்கே?
மூடிய விழிகளை திறந்திடாயோ?....

செம்பகம்

5 comments:

  1. வலியடங்கா வலிந்த வரிகள்.
    செண்பகம் அழித்ததில் பங்கு உலகத்திற்கும்தானே !

    ReplyDelete
  2. ஹேமா நன்றி.......

    நேசமித்ரன் நன்றி.......

    ReplyDelete
  3. துயரத்தை உணர்த்தும் வரிகள், மிகவும் அருமையாக உள்ளது...!

    ReplyDelete
  4. 'Word Verification' ஆப்ஷனை எடுத்துவிடலாமே. கமெண்ட் இட எளிமையாக இருக்கும்.

    ReplyDelete
  5. அறிவு அவர்களே தமிழிஸ் தளத்தில் இணைத்திருக்கிறேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete